தொடர்ந்து 25 முறை அமமுக பிரமுகர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, கல்லை போட்டு கொன்ற மனைவி
கொதிக்கும் வெந்நீரை ஊற்றியும், கல்லை தூக்கிப்போட்டும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் அ.ம.மு.க. பிரமுகரை அவருடைய மனைவி கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம்
கொதிக்கும் வெந்நீரை ஊற்றியும், கல்லை தூக்கிப்போட்டும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் அ.ம.மு.க. பிரமுகரை அவருடைய மனைவி கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.ம.மு.க. பகுதி செயலாளர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை (வயது 51). இவர் அ.ம.மு.க.வில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.இந்தநிலையில், சர்க்கரைக்கும், அன்னலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் சர்க்கரை தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அன்னலட்சுமி ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து வந்து சர்க்கரை மீது ஊற்றினாராம். இதனால் வலியால் அவர் அலறி துடித்தார்.
அரிவாள் வெட்டு
அந்த நேரத்தில் சர்க்கரை எழுந்து ஓடிவிடாமல் இருக்க அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி வந்து சர்க்கரையின் தலையில் அன்னலட்சுமி போட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து கிடந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சர்க்கரை, கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னலட்சுமி அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று விசாரணை நடத்தினர். சர்க்கரையின் உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சர்க்கரைக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி அன்னலட்சுமி வற்புறுத்தி வந்ததால், கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில்தான் கணவரை அவர் கொடூரமாக கொன்று இருக்கலாம். கணவரை அவர் அரிவாளால் வெட்டும் காட்சியும், தப்பி ஓடும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது, என்று தெரிவித்தனர்.
தப்பி ஓடிய அன்னலட்சுமியை கைது செய்த பின்புதான் கொலைக்கான முழு பின்னணி தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.