உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில்கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் 4-வது முறையாக தேர்வு
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் 4-வது முறையாக தேர்வாகி உள்ளார்.
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் 4-வது முறையாக தேர்வாகி உள்ளார்.
விஞ்ஞானிகள் பட்டியல்
உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவருடைய குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம்பிடித்துள்ளனர்.
இயற்கையான மருந்துகள்
இதில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கோவிந்தராஜன் இடம் பிடித்துள்ளார். இவர், நானோ தொழில்நுட்பம் மூலம் இயற்கையான மருந்துகளை கண்டறிந்து அதன் மூலம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
மனிதர்களை தாக்கும் நோய்களை தடுக்கும் இயற்கையான மருந்துகளை நானோ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து இருந்தார்.
தொடர்ந்து 4-வது முறையாக...
தொடர்ந்து 4-வது முறையாக 2022-ம் ஆண்டுக்கான பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்த பேராசிரியர் கோவிந்தராஜனுக்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) அகிலா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.