மாயமானவர்களில் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது


மாயமானவர்களில் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமானவர்களில் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த பேரங்கியூரை சேர்ந்த நரசிம்மன் மகன் சதீஷ் (வயது 30), பிரகாசம் மகன் பரத் (30). இவர்கள் இருவரும் கடந்த 17-ந் தேதி மாலை தங்கள் நண்பர்கள் சிலருடன் பிடாகம் தென்பெண்ணையாற்றுக்கு குளிக்க சென்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் ரப்பர் படகுகள் மூலம் தேடும் பணியில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டனர்.

அதேபோல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பேரங்கியூர் கிராமத்தைச் சார்ந்த பா.ம.க. பிரமுகர் ராமமூர்த்தி ஏற்பாட்டின் பேரில் கிராமமக்கள் இளைஞர்கள் இணைந்து 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கரடிப்பாக்கம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பை ஏற்படுத்தி வெள்ளத்தை ஒரு பக்கமாக திருப்பி விட்டனர். நீர் வரத்து குறைந்த பின்னர் கிராமமக்கள் ஆற்றில் இறங்கி வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மீறி கிராமமக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றின் பகுதியில் நேற்று மாலை சதீஷின் உடல் கரை ஒதுங்கியது. இதையறிந்தது வந்த அவரது பெற்றோர், உறவினர்கள் சதீஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


Next Story