அமராவதி அணையில் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி


அமராவதி அணையில் பாதுகாப்பற்ற    முறையில் படகு சவாரி
x
திருப்பூர்


அமராவதி அணையில் பாதுகாப்பற்ற முறையில் படகுசவாரி நடக்கிறது.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு முன்பு பூங்கா, ராக்கார்டன் அமைந்துள்ளது. அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உடுமலை- கல்லாபுரம் சாலையில் அமராவதி வனத்துறையினர் பராமரித்து வருகின்ற முதலைப்பண்ணையும் உள்ளது.

அணை மற்றும் முதலைப்பண்ணையை பார்வையிடவும் இயற்கை அம்சங்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கவும் படகு சவாரி செய்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அமராவதி அணைக்கு வருகை தருகின்றனர். இதனால் உடுமலை பகுதியில் சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி அணை விளங்கி வருகிறது.

படகுசவாரி

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை யொட்டி அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இதனால் அணைப்பகுதியில் தண்ணீர் மற்றும் காற்றின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.இந்த சூழலில் மூன்று மாதங்களுக்கு பிறகு அணைப்பகுதியில் படகு சவாரி நடைபெற்றது. இதனால் தீபாவளி விடுமுறையை கொண்டாட அமராவதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து குடும்பத்துடன் உற்சாகமாக படகில் சென்று சவாரி செய்து மகிந்தனர். இதற்காக 10 நிமிடம் பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பாதுகாப்பற்ற சூழல்

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் அணையில் 2 படகுகள் இயக்கப்பட்டது.அதில் ஒரு படகில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு உயிர் காக்கும் கவசம்(லைப் ஜாக்கெட்) வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அபாயகரமான முறையில் சவாரியை மேற்கொண்டனர். படகு இயக்குபவர்களின் அலட்சியம் காரணமாக அதில் சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது வேதனை அளிக்கிறது. எனவே அணையில் நடைபெறுகின்ற படகு சவாரியை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாக உள்ளது. அணைப்பகுதியில் பொழுதை கழித்த சுற்றுலாப்பயணிகள் பின்பு பூங்கா, முதலைப்பண்ணை, அமராவதி ஆறு, ராக் கார்டன் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் முதலைப்பண்ணை அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.


Next Story