நிலங்களை உழுது தயார்படுத்தும் விவசாயிகள்
தளி:
தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து நிலங்களை உழுது விவசாயிகள் தயார்படுத்தி வருகிறார்கள்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளைத்தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது. அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் அடிவாரப்பகுதி வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பச்சை பசேலென்று வளமுடன் காணப்பட்ட அணைப்பகுதி பொழிவை இழந்து பரிதவித்து வருகிறது.அணைக்கு பெரிதளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி 62.77அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருமூர்த்தி அணை
அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்ற திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி தவித்து வருகிறது.
இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் கைகொடுத்து உதவுவது இல்லை.
அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 30.05 கன அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிறைய வருகிறது.இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்தி விட்டு பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.