84 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை
84 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 84 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
84 வயது முதியவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவாரக்கார் தெருவை சேர்ந்தவர் ராமு(வயது 84). அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
மேலும் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை
அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, போலீஸ்காரர் சூர்யா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.