ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடித்தால்விபத்து இல்லாத தூத்துக்குடியைஉருவாக்க முடியும்: கலெக்டர்


தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடித்தால்விபத்து இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க முடியும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

ஓட்டுனர்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தால் விபத்து இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க முடியும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

மருத்துவ முகாம்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார நிறைவு நாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வரவேற்று பேசினார்.

கலெக்டர் பேச்சு

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், டாக்டர்களுக்கு அடுத்தபடியாக மக்கள் ஓட்டுனர்களைத்தான் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. சாலை பாதுகாப்புக்காக அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. முதல்-அமைச்சர் இன்னுயிர் காப்போம் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்குள் இலவசமாக அவசர சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தவிர்க்கலாம்.

விபத்து இல்லாத மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 324 விபத்து மரணங்களும், 2021ம் ஆண்டு 394 விபத்து மரணங்களும், 2022ம் ஆண்டு 373 விபத்து மரணங்களும் ஏற்பட்டு உள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தால் விபத்து இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க முடியும்' என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மேயர் பேசுகையில், வாகன ஓட்டுனர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்கும். பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. பள்ளிகளில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். லாரி ஓட்டுனர்கள், பஸ் ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். தூத்துக்குடியில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏராளமான இடவசதிகள் உள்ளன. சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி மாவட்டத்தை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டர், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து டெப்போ ஓட்டுனர்கள், ஓட்டுனர் பயிற்சி மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story