நீலகிரிக்கு கூடுதலாக 200 போலீசார் வரவழைப்பு


நீலகிரிக்கு கூடுதலாக 200 போலீசார் வரவழைப்பு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனையொட்டி போக்குவரத்து ஒழுங்குப்படுத்த நீலகிரிக்கு கூடுதலாக 200 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

கோடை சீசனையொட்டி போக்குவரத்து ஒழுங்குப்படுத்த நீலகிரிக்கு கூடுதலாக 200 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஊட்டி சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நீலகிரியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது குறித்து கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் ஊட்டி நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டது.

200 போலீசார்

இதைத்தொடர்ந்து கோடை சீசனையொட்டி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு கூடுதலாக 200 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஊட்டியில் மட்டும் 100 போலீசார் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பணிக்கு வந்து உள்ளனர். வார விடுமுறை நாட்கள் உள்பட இனி வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, பொதுமக்களுக்கு வழிகாட்டுவது, கனிவாக பேசுவது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறுகையில், கோடை சீசனையொட்டி நீலகிரிக்கு முதல் கட்டமாக 200 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மலர் கண்காட்சி நடக்கும் சமயத்தில் கூடுதலாக 200 போலீசார் வர உள்ளனர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள். அதேபோல் கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணிகள் எளிதாக உள்ளது என்றார்.


Next Story