வேரோடு அகற்றப்பட்ட பழமையான மரம்
தேனி அல்லிநகரத்தில், வேரோடு பழைய மரத்தை அகற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேனி அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகில் நின்ற பழமையான புளிய மரம் நேற்று வேரோடு அகற்றப்பட்ட நிலையில் கிடந்தது. ஏற்கனவே அந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு மொட்டையாக நின்ற நிலையில், நேற்று வேரோடு அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. யாரேனும் மர்ம நபர்கள் மரத்தை சாய்த்து விட்டார்களா? அல்லது மழைக்கு மரம் சாய்ந்ததா? என தெரியவில்லை.
மர்மமான முறையில் மரம் சாய்ந்து கிடந்தது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அல்லிநகரத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், "பழமையான மரத்தை வேரோடு தகர்த்து வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தால் மரம் தானாக விழுந்ததா? அல்லது மர்ம நபர்களால் சாய்க்கப்பட்டதா? என தெரிய வரும். இதுதொடர்பாக அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.