பல வருடங்களாக முடங்கி கிடந்த பழங்காநத்தம் சிக்னல் செயல்பாட்டுக்கு வந்தது
பல வருடங்களாக முடங்கி கிடந்த பழங்காநத்தம் சிக்னல் செயல்பாட்டுக்கு வந்தது
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் பழங்காநத்தம் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் இடது புறம் மாடக்குளம் கிராமத்திற்கும், வலது புறம் டி.வி.எஸ். நகருக்கும் நேராக சென்றால் பழங்காநத்தம் பைபாஸ் ரோடு மற்றும் ஆண்டாள்புரம் பிரிவு ரோடு உள்ளன. இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுண்டு. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வரும் நேரங்களில் இந்த பாதையில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதற்காக அந்த பாதையில் டி.வி.எஸ். நகர் பகுதிக்கு தனியாக ெரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த மேம்பாலம் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது.
இதற்கிடையே நீண்ட காலமாக அப்பகுதியில் முடங்கி கிடந்த சிக்னல் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் சிக்னல் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், அதனை கவனித்து வாகனங்களை இயக்கும்படியும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். இந்த சிக்னல் பயன்பாட்டால் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.