குரும்பூர் அருகே இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி


குரும்பூர் அருகே வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். பலத்த காயமடைந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

குரும்பூர் அருகே வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். பலத்த காயமடைந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வரதட்சணை கொடுமை

குரும்பூர் அருகே உள்ள மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கும், ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கும்(வயது35) எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தீவைப்பு

நேற்று முன்தினம் வழக்கம் போல் வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது கணவர் முத்துக்குமார், மாமனார் சந்தனம், மாமியார் சந்திர புஷ்பம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாப்பாவை அடித்து உதைத்தார்களாம். திடீரென்று வீட்டில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய் பாப்பா உடலில் ஊற்றி 3 பேரும் தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.

பாப்பா உடலில் தீப்பிடித்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனராம்.

போலீசாரிடம் வாக்குமூலம்

ஆனாலும், உடலில் 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பாப்பாவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது அவர், தன் மீது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய 3பேரும் திட்டமிட்டு மண்ணெண்ணைைய ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவர் கைது

இதை தொடர்ந்து குரும்பூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பாப்பாவின் கணவர் முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாமனார், மாமியாரை போலீசார் தேடிவருகின்றனர்.

வரதட்சணைக்காக இளம்பெண் மீது கணவரும், குடும்பத்தினரும் தீவைத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story