கலெக்டர் படத்தை 'வாட்ஸ் அப்'பில் வைத்து அவரிடமே மோசடியில் ஈடுபட முயற்சி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து, அவரிடமே மோசடியில் ஈடுபடமுயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து, அவரிடமே மோசடியில் ஈடுபடமுயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் புகைப்படம்
தற்போது சமூக வலைதளங்கள் மூலமாகவும், போன் அழைப்பு மூலமாகவும் நூதன முறையில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மோசடி நபர்கள் புதிது புதிதாக யுக்திகளை கையாண்டு ஏமாற்றி வருகிறார்கள். அவர்களை தடுப்பது காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் வந்தது. அந்த எண்ணின் படத்தில் தனது புகைப்படம் இருப்பதை கண்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் பதில் அளித்தார்.
மோசடி செய்யமுயற்சி
அடுத்த சில நிமிடத்தில், தனக்கு அமேசான் கிப்ட் வவுச்சர் 30 வந்துள்ளது. ஒரு வவுச்சரின் விலை ரூ.10 ஆயிரம். இந்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்தி ஆக வேண்டும். நான் இப்போது மீட்டிங்கில் இருக்கிறேன். ரூ.3 லட்சம் கொடுத்து கிப்ட் வவுச்சரை வாங்கி அனுப்புங்கள் என குறுந்தகவல் வந்தது.
கலெக்டருக்கு குறுந்தகவல் வந்த அதே எண்ணில் இருந்து மற்ற அதிகாரிகள் பலருக்கும் இதேபோன்று அமேசான் கிப்ட் வவுச்சர் வாங்கி தரும்படி கேட்டு தகவல் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட கலெக்டர், இந்த நூதன மோசடியில் யாரும் ஏமாற வேண்டாம் என தனது அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட சைபர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.