மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x

காணாமல் போன மனைவி, மகனை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்

தீக்குளிக்க முயற்சி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பேரணாம்பட்டை அடுத்த கோட்டையூரை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 37) என்பவர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு அவர் திடீரென பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை சமாதானம் செய்து விசாரித்தனர்.

மனைவி, மகனை கண்டுபிடிக்க கோரிக்கை

அப்போது அவர் கூறுகையில், நான் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு சகுந்தலா என்பவருடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 1½ வயதில் புகழ் என்ற மகன் உள்ளான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு மகனுடன் மனைவி சென்றார். அதன்பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் மனைவி, மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மனைவி, மகன் காணாமல் போய் ஓராண்டுகள் ஆகியும் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்து மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார்.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காணாமல்போன இருவரையும் கண்டுபிடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்.

அதையடுத்து ராஜீவ்காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story