விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி பெண் பக்தரிடம் நகையை பறிக்க முயற்சி திடீரென மனம்மாறி மன்னிப்பு கேட்டு சென்ற வாலிபரால் பரபரப்பு
விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி பெண் பக்தரிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர், திடீரென மனம்மாறி மன்னிப்கேட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்துக்குள் ஆழத்து விநாயகர் கோவில் தனியாக அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 18 அடி ஆழத்துக்குள் அமைந்துள்ளது.
நேற்று காலை 8.45 மணிக்கு இந்த கோவிலுக்கு 30 வயதுடைய பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது, அங்கு 35 வயது வாலிபர் ஒருவரும் சென்றார். அந்த வாலிபர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சுவரை பார்த்து திருப்பி வைத்துவிட்டு, பெண் பக்தரிடம் சென்று நகையை பறிக்க முயன்றுள்ளார்.
மன்னிப்பு கேட்ட வாலிபர்
கோவில் வளாகத்தில் மற்ற பக்தர்கள் யாரும் இல்லாத நிலையில், தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண், தனக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். உடனே, நகையை வேண்டும் என்றால் தந்துவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள் என்று கூறி, நகையை கழட்டினார்.
அதற்குள் மனம் மாறிய அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் நகையை கழட்ட வேண்டாம், நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார்.ஆழத்து விநாயகர் கோவிலில் இருந்து வெளியே வந்த அந்த பெண், விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். மேலும் அதிகாரிகளிடம் தன்னை பற்றிய விவரம் எதையும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் நேரில் சென்று விசாரித்தனர்.
முகத்தை மூடி வந்தார்
அப்போது, கோவில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில், ஆழத்து விநாயகர் கோவிலில் அந்த பெண் உள்பட 3 பேர் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது, ஒரு வாலிபர் கோவில் படிக்கட்டில் தனது முகத்தை இரு கைகளால் மூடியபடி வருகிறார். கோவிலுக்குள் இருந்த பக்தர்களில் 2 பேர் வெளியே சென்றவுடன், அந்த வாலிபர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா அருகே வந்து அதை சேதப்படுத்தி இருக்கும் காட்சி பதிவாகி உள்ளது.
கேமராவை சேதப்படுத்திய போது அந்த வாலிபர் தனது முகத்தில் இருந்து இரு கைகளையும் விலக்கி கொண்டதால், அவரது உருவம் அதில் பதிவாகி இருக்கிறது.
பரபரப்பு
நகை பறிக்க முயன்றதாக கூறப்படும் வாலிபர், முகத்தை மூடிய படியே வந்ததன் மூலம், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். இதன் மூலம், அவர் திட்டமிட்டே வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.