மயான பாதையை அடைத்ததால் மறியலில் ஈடுபட முயற்சி
அய்யலூர் அருகே மயான பாதையை அடைத்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அய்யலூர் அருகே உள்ள கெங்கையூரில், மயானத்துக்கு செல்லக்கூடிய வண்டி பாதையை தனிநபர் ஒருவர் வேலி போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த காந்தியம்மாள் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை எரியூட்டுவதற்காக மயானத்துக்கு உறவினர்கள் எடுத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால் மயானத்துக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருந்ததால், இறுதி ஊர்வலம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இறந்தவரின் உடலை நடுவழியில் வைத்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீண்ட காலமாக பயன்படுத்தும் பாதையை அடைக்க கூடாது. பாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால் ஆர்.டி.ஓ. மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கமான பாதையில் இறுதி ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.