செங்கல்லால் அடித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலம்


செங்கல்லால் அடித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேலகிருஷ்ணன்புதூரில் பிணமாக கிடந்த தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

மேலகிருஷ்ணன்புதூரில் பிணமாக கிடந்த தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிட தொழிலாளி பிணம்

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புகாடு புல்லுவிளையை சேர்ந்தவர் ராஜதுரை (வயது50), கட்டிட தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

ராஜதுரை கடந்த 7-ந் ேததி மேலகிருஷ்ணன்புதூர் செல்வதாக கூறிவிட்டு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை தேடினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பை அடுத்த முதல் தெருவில் ராஜதுரை ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜதுரை பிணமாக கிடந்த இடத்தின் அருகே உடைந்த மது பாட்டில்கள், செங்கற்கள், ஒரு கைக்கெடிகாரம், ஒரு மோட்டார் சைக்கிளின் சாவி போன்றவை கிடந்தன.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர்.

அதில் சம்பவத்தன்று இரவு மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருக்கும் ராஜதுரைக்கும் இடையே தகராறு ஏற்படுவதும், அந்த நபர் ராஜதுரையை துரத்தி தாக்குவதும், பின்னர் அவர் சாவி இல்லாமல் வாகனத்தை உருட்டி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனை முடிவு

இந்தநிலையில் ராஜதுரையின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் செங்கல்லால் முதுகு, மார்பு, தலை போன்ற பகுதிகளில் கொடூரமாக தாக்கப்பட்டும், பூட்ஸ் காலால் கழுத்தை நெரித்தும் கொலை ெசய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொலை செய்தவர்கள் யார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அவரை பிடித்து விசாரித்தால் கொலை தொடர்பான தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

2 தனிப்படை அமைப்பு

கொலையாளிகளை பிடிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை நெருங்கி விட்டதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story