மின்வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசார ஊர்வலம்
எடப்பாடி:-
எடப்பாடி, ஓமலூரில் மின்வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. அப்போது வீதி, வீதியாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
எடப்பாடி
எடப்பாடி பஸ் நிலைய பகுதியில் நேற்று நடந்த மின்வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேட்டூர் கோட்ட கண்காணிப்பு என்ஜினீயர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தலைமையில் மின்வாரிய அலுவலர்கள், மின் வாகன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த விழிப்புணர்வு ஊர்வலம்,, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து மின்வாரிய அலுவலர்கள், மின் வாகன பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மை குறித்தும், மின் வாகனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்த குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் மின்வாரிய என்ஜினீயர்கள் சீனிவாசன், ரமேஷ்பாபு, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
ஓமலூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார வாகனங்களை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பெட்ரோல், டீசலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஓமலூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டு தாலுகா அலுவலகம், காமலாபுரம், தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி, எல்லம்பட்டி மாரியம்மன் கோவில், செம்மாண்டப்பட்டி, தொளசம்பட்டி, தாரமங்கலம், நங்கவள்ளி, வனவாசி, கே.ஆர்.தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு பிரசாரத்தை ஓமலூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஓமலூர் கோட்டை செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் உதவி செயற் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன் (ஓமலூர்), செந்தில்குமார் (தீவட்டிபட்டி), சந்திரன் (தாரமங்கலம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.