எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது
ஆம்பூர் அருகே சார்ஜ் ஏற்றிய போது எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆம்பூர் அருகே அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.
இவர் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை சில்லரை விற்பனை மூலம் விற்பனை செய்து வருகிறார்.
தீப்பற்றி எரிந்தது
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மளிகை பொருட்களை விற்பனை செய்து முடித்து விட்டு சசிகுமார் வீட்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு சார்ஜ் போட்டார். அப்போது அதிலிருந்து சிறிதாக புகை வந்தது. உடனடியாக சசிகுமார் மின் இணைப்பை துண்டிப்பதற்குள் திடீரென எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்த மின் இணைப்பை துண்டித்து தீப்பற்றி எரிந்த வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.