மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கரூரில் விடுதியில் தங்கி மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

என்ஜினீயர்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள கொரியம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் லட்சுமணன் (வயது 25). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ராஜசூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். லட்சுமணன் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடினார்

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி லட்சுமணனுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் அவர் திருப்பூரில் இருந்து புறப்பட்டு கரூருக்கு வந்தார். பின்னர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் தனது மனைவி ராஜசூர்யாவுக்கு போன் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கரூர் வரும்படி கூறினார். அதன்படி ராஜசூர்யா திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூருக்கு வந்தார். பின்னர் அன்று இரவு விடுதியில் லட்சுமணனும், ராஜசூர்யாவும் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர். இதையடுத்து உடனடியாக ராஜசூர்யா விடுதியில் இருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் லட்சுமணன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 28-ந்தேதி காலை வெகுநேரம் ஆகியும் லட்சுமணனின் அறை திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் லட்சுமணன் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லட்சுமணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, லட்சுமணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story