கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பூந்தமல்லி அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

நசரத்பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஸ்ரீகாளிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா (வயது 19). இவர் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர்

என்ஜினீயரீங் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் உடனிருந்த மாணவிகள் படிப்பதற்காக அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது, தனக்கு தலை வலிப்பதாகவும், அதனால் இரவு படிக்க வரவில்லை என்று மாணவிகளிடம் கூறிய ஜெயா தனிமையில் இருந்துள்ளார்.

பின்னர் விடுதியின் 3-வது மாடியில் உள்ள அறையில் திடீரென துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார்.

மாணவி சாவு

சிறிது நேரம் கழித்து உடன் தங்கியிருந்த மாணவிகள் வந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவியை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் மாணவி ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இவர் அதே கல்லூரியில் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story