தமிழகம் திரும்பிய ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகம் திரும்பிய ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘மண் காப்போம்' இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோவை,
மார்ச் 21-ந் தேதி லண்டனில் இருந்து 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஜக்கி வாசுதேவின் 'மண் காப்போம்' இயக்கத்துக்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரும்பிய ஜக்கி வாசுதேவுக்கு நேற்று சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கோவை வந்த ஜக்கி வாசுதேவ் சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
பேராதரவு
நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசும்போது, "ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பெரும் செயலை முன்னெடுத்திருப்பதற்கு எனது பாராட்டுகள். இதுபோன்ற பெரும் பணிகளை அவர் தொடர்ந்து செயல்படுத்த எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
ஜக்கி வாசுதேவ் பேசுகையில், "'மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளன. 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 320 கோடி பேர் சமூக வலைதளங்கள் மூலம் 'மண் காப்போம்' இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை" என்றார்.
பிரமாண்ட வரவேற்பு
இதையடுத்து, பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஜக்கி வாசுதேவுக்கு நேற்று காலையில் வரவேற்பு அளித்தனர். சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பஸ் நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஏராளமான தன்னார்வலர்களும், பொதுமக்களும் ஜக்கிவாசுதேவை வரவேற்றனர். பின்னர் கோவை வந்த ஜக்கி வாசுதேவ், மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து, அங்கிருந்து பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு ஆதியோகியை அடைந்தார். வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஜக்கி வாசுதேவை பிரமாண்டமான முறையில் வரவேற்றனர். ஆதியோகி முன்பு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.