புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது


புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது
x

மயிலாடுதுறை ஒன்றியத்தில் 32 பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக கணக்கீடப்பட்டு புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஒன்றியத்தில் 32 பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக கணக்கீடப்பட்டு புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் செல்வம் தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு;

வடவீரபாண்டியன் (காங்):- இளந்தோப்பு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சோழியன்கோட்டகம் பள்ளிக்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

32 பள்ளி கட்டிடங்கள் சேதம்

ஆணையர்:- ஒன்றியத்தில் 32 பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கீடப்பட்டு புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கிய பின்னர் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும். மேலும் உறுப்பினர்கள் தெரிவிக்கும் பள்ளி கட்டிடங்களையும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மோகன் (தி.மு.க:- சீர்காழி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் ஓரத்தில் மண் கொட்டி உள்ளனர். இதனால் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மண்ணில் சறுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே சாலையின் ஓரத்தில் செம்மண் கொட்ட நெடுஞ்சாலைத்துறையினரை அறிவுயுறுத்த வேண்டும்.

தலைவர்:- நெடுஞ்சாலைத்துறையினரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு அங்காடி

காந்தி (தி.மு.க.):- காளி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு அங்காடி மோசமான நிலையில் உள்ளது. அதற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

சக்திவேல் (பா.ம.க.):- 500 மாணவர்களுக்கு மேல் படிக்கும் கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக கழிவறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்.

முருகமணி (தி.மு.க.):- சோழம்பேட்டை ஊராட்சியில் ஒரே குளத்தில் பலமுறை தடுப்பு சுவர் கட்ட நிதி ஒதுக்குவது ஏன்? குளங்களில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான மதிப்பீட்டில் பொறியாளர்கள் சில இடங்களில் தொகை கூடுதலாகவும் சில இடங்களில் தொகை குறைவாகவும் மதிப்பீடு செய்கின்றனர்.

தடுப்புச்சுவர்

மகேஸ்வரி (பொறியாளர்)-: குளத்தின் ஆழத்திற்கு ஏற்ப தடுப்புச்சுவர் கட்டுவதற்கான மதிப்பீடு பணி தயாரிக்கப்படுகிறது.

அர்ஜுனன் (தி.மு.க.):- குளிச்சார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி கட்டிடங்களில் பட்டியலில் அதனையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

முடிவில் ஒன்றியக் குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story