முன்னாள் ராணுவ வீரர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு


முன்னாள் ராணுவ வீரர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு
x

சந்தவாசல் அருகே முன்னாள் ராணுவ வீரர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே முன்னாள் ராணுவ வீரர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி உஷாராணி (37). இவர்களுக்கு பரத்குமார் (13) என்ற மகனும், காவியஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.

கணவர் சுரேசிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷாராணி தனது தாய் வீடான கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ச்சுனாபுரம் புதூர் கிராமத்தில் மகன், மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சுரேஷ் மாமனார் பூசணம் வீட்டுக்கு வந்து தனது மனைவி உஷாராணியிடம், குழந்தைகளுடன் கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு வருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் வர மறுத்து வாக்குவாதம் செய்தார்.

மண்எண்ணெய் ஊற்றி எரிப்பு

அப்போது ஆத்திரமடைந்த உஷாராணி, அவரது தந்தை பூசணம் ஆகிய இருவரும் நீ செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி என கூறி, சுரேஷ் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

தீக்காயங்களுடன் அலறியபடி தெருவுக்கு வந்த சுரேசை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவி கைது

இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கண்ணமங்கலம் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர், உஷாராணி, பூசணம் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து உஷாராணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுரேசின் மாமனார் பூசணத்தை தேடி வருகின்றனர்.


Next Story