மேலும் 4 பெண்களிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர்
குமரியில் மேலும் 4 பெண்களிடம் முன்னாள் ராணுவ வீரர் நகை பறித்தது போலீஸ் காவல் விசாரணையில் அம்பலமானது.
திங்கள்சந்தை:
குமரியில் மேலும் 4 பெண்களிடம் முன்னாள் ராணுவ வீரர் நகை பறித்தது போலீஸ் காவல் விசாரணையில் அம்பலமானது.
நகை பறிப்பு வழக்கு
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்களை வழிமறித்து அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முன்னாள் ராணுவ வீரர் கைது
இந்தநிலையில் நகை பறிப்பு சம்பவத்தில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மெர்லின் ராஜ் (வயது 42) மீது இரணியல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோர்ட்டு அனுமதி பெற்று மெர்லின்ராஜை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தலக்குளம், களியங்காடு பகுதிகளில் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர் மீது ஆசாரிபள்ளம், நேசமணிநகர் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு நகைப்பறிப்பு வழக்கும், இரணியல் போலீஸ் நிலையத்தில் 2 வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இரணியல் போலீசார் மெர்லின் ராஜை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.