அய்யங்குளத்தில் நந்தி சிலை அமைத்து அழகுப்படுத்தப்படும்


அய்யங்குளத்தில் நந்தி சிலை அமைத்து அழகுப்படுத்தப்படும்
x

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நந்தி சிலை அமைத்து அழகுப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நந்தி சிலை அமைத்து அழகுப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அய்யங்குளம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அய்யங்குளத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தெப்பல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் இங்கே நடைபெற்று வருகிறது.

இந்த குளத்தின் ஆழம் 32 அடி ஆகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் 16 அடியாக தூர்ந்து போய் உள்ளது. தற்போது இந்த குளம் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இந்தத் தூய்மை அருணை அமைப்பின் அமைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளார். இவர் இன்று அய்யங்குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை சிறப்பாக செய்திடவும் குளத்தை அழகுபடுத்தவும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தூய்மை உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தூய்மை அருணை என்ற அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆயிரம் தூய்மை பணியாளர்களை கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை பணியை செய்து வருகிறோம்.

நகரை பசுமையாக்க தேனிமலை பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல நகரின் அனைத்து வார்டுகளிலும் மசூதி, சர்ச் போன்ற இடங்களிலும் மதபாகுபாடின்றி தூய்மை பணிகளை செய்து வருகிறோம்.

மத்திய அரசின் சான்று

தூய்மை அருணை அமைப்பானது அரசியல் மதங்களுக்கு அப்பாற்பட்டு சமூக பணியாற்றி வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியை தூய்மை அருணை அமைப்பினர் தூய்மை பணி செய்ததால் இந்தியாவிலேயே தூய்மையான அரசு மருத்துவக் கல்லூரி என்ற சான்றை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.

கொரோனா காலத்திலும் கிரிவலப்பாதையில் உள்ள 500 சாதுக்களுக்கு தினமும் உணவளிக்கப்பட்டது. இதேபோல் காவல்துறை, அரசு அலுவலர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தினமும் உணவுகள் வழங்கப்பட்டது.

நலிவடைந்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கினோம். 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அய்யங்குளம் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த குளம்.

சிறப்பு வாய்ந்த இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போன நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது 4 பேர் இந்த குளத்தின் சேற்றில் சிக்கி இறந்தனர்.

படிக்கட்டுகள்

இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் ஆன்மிக பக்தர்களும் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குளத்தை சீரமைப்பேன் என்று உறுதியளித்தேன் அதன்படி தற்போது தூர்வாரும் பணியை செய்து வருகிறோம்.

இந்த குளத்தை எப்படி சீரமைக்க வேண்டும் என்று ஆன்மிக பக்தர்கள் விரும்புகிறார்களோ அதை எனக்கு நேரடியாகவோ கடிதம் மூலமாகவோ தெரிவித்தால் அதனை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வயதானவர்கள் இந்த குளத்தில் இறங்குவதற்கு வசதியாக கைப்பிடிகளுடன் படிக்கட்டுகளை நான்கு புறமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் இந்த குளத்தில் நான்கு பகுதிகளில் பில்டர் அமைத்து கசடு சேராமல் குளம் தூய்மையாக இருக்கும்படி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

நந்தி சிலை அமைக்கப்படும்

எனக்கு ஆன்மிக பக்தர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பப்பட்டது அதில் அய்யங்குளத்தில் நந்தி சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அய்யங்குளம் மத்தியில் உள்ள மண்டபம் அழகுப்படுத்தப்பட்டு அதன் நடுவில் அண்ணாமலையார் மலையை நோக்கிய வண்ணம் நந்தி சிலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தடை போட முடியாது

திருவண்ணாமலைக்கு வந்த கவர்னர் ரவி, கிரிவலப்பாதையில் உள்ள அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலு, உணவு என்பது அவரவர் விருப்பமும் உரிமையும் ஆகும். கிரிவலம் வரும் பக்தர்கள் அசைவ உணவையும் உணவகங்களையும் தவிர்க்கலாம் ஆனால் இதற்கு அரசு தடை போட முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சீனிகார்த்திகேயன், துரை வெங்கட், டி.வி.எம்.நேரு, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மண்ணுலிங்கம், எஸ்.விஜயகுமார் டி.எம்.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story