ஊதிய உயர்வு கோரிக்கை மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்


ஊதிய உயர்வு கோரிக்கை மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்
x

கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாநில பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண கோரி திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச்சங்க பொது செயலாளர் பத்ராசலம் முன்னிலை வகித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் பொது செயலாளர் யுவராஜ் தர்ணா போராட்டத்தை விளக்கி பேசினார்.

இதில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரமும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் அமல்படுத்த வேண்டும்.

மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு உண்டான நிலுவை தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். சொந்த மாவட்டத்திற்கு மாவட்ட பணியிட மாற்றம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

2015-16-ம் ஆண்டு மாநில ஆள் சேர்ப்பு மையம் மூலம் வங்கி பணிக்கு தேர்வான உதவியாளர்களுக்கு பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ செலவினை அந்தந்த கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் ஏற்றிட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன், திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர்கள் சங்க பொது செயலாளர் உதயகுமார்,

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் செயலாளர் பூமிநாதன், மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story