எரிந்து கொண்டிருந்த உடல் மீது தவறி விழுந்த முதியவர் கருகி பலி
ஜோலார்பேட்டை அருகே சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த உடல்மீது மது போதையில் தவறி விழுந்த முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை அருகே சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த உடல்மீது மது போதையில் தவறி விழுந்த முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் உடல் எரிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணாண்டப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் பெண் ஒருவர் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பெண்ணின் உடலை எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தின மாலை தகனம் செய்துள்ளனர்.
உடலுக்கு தீ வைத்து விட்டு அனைவரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுடுகாட்டில் வெட்டியான் வேலை பார்க்கும் நபர் ஒருவர் அந்த பெண்ணின் உடல் முழுமையாக எரிந்துள்ளதா என பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பெண்ணின் உடல் முழுமையாக எரிந்த நிலையில் அதன் மீது 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
முதியவர் தவறிவிழுந்து பலி
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பொதுமக்கள் சென்று பார்த்துள்ளனர். பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்கிற அசோக் குமார் (வயது 60) என்பதும், குடிபோதையில் தவறி விழுந்து தீயில் கருகி இறந்ததும் தெரிய வந்தது. இவர் சுடுகாட்டில் உள்ள கட்டிடம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு மகள்கள் உண்டு. 30 வருடங்களுக்கு முன்பு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 30 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினர் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்.
சுடுகாட்டில் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட தீயில் முதியவர் தவறிவிழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.