ரெயிலில் 30 கிலோ குட்கா கடத்திய ஒடிசா மாநில முதியவர் கைது
ரெயிலில் 30 கிலோ குட்கா கடத்திய ஒடிசா மாநில முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.சுப்பிரமணி, தலைமை காவலர் பெல்சியா மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேச மாநிலம் தானாபூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது ரெயில்வே போலீசார் ரெயிலில் பொதுப்பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த ஐந்து பேக்குகளை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இதை கடத்தியவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசா மாநிலம், கெண்டுஜார், பாங்கோ பகுதியை சேர்ந்த சோமநாத் பொரிடா (வயது 62) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து, 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.