கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜாதி பெயரை கூறி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஜாதி பெயரை கூறி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அப்போது மனு கொடுக்க வந்த முதியவர் ஒருவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கோத்தகிரி அடுத்த ஆடுமந்து பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65) என்பதும், போலீஸ் நிலையத்தில் தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜாதி பெயரை கூறி தாக்கினர்

தொடர்ந்து ரங்கசாமி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி கடசோலை அரசு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் நான் கலந்துகொண்டேன். விழாவில் தலைமை ஆசிரியர் மட்டும் கலந்துகொண்டார். மற்ற ஆசிரியர்கள் ஏன் வரவில்லை என கேட்டேன். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிருந்த சிலர் என்னை ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி தாக்கினர்.

இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னை ஜாதி பெயரை கூறி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.

பெள்ளாடாமட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிராமத்தை சேர்ந்த ஒருவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியில் இயங்கும் தனியார் மினி பஸ்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் என்று கூறியும், வேலை வாங்கி தருவதாக கூறியும் பலரை ஏமாற்றி உள்ளார். அந்த நபர் மீது நில மோசடி புகார்களும் உள்ளது. ஊராட்சி அதிகாரிகள், மக்களை மிரட்டி வருவதால், பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story