கழிப்பிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் காயம்
கழிப்பிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் காயம் அடைந்தார்.
சிவகாசி,
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் ஆர்ச் அருகில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அதன் அருகில் இருக்கும் கழிப்பிடத்தின் சுற்றுச்சுவர் நேற்று காலை திடீரென இடிந்து அங்கு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் மீது சுவர் விழுந்ததால் அவர் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தில் இருந்து முதியவரை மீட்டனர். பின்னர் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காயம் அடைந்தவர் சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த மலைராஜ் (வயது 60) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.