அரிவாளை காட்டி போக்குவரத்தை சீரமைத்த முதியவர்
வேடசந்தூரில் அரிவாளை காட்டி போக்குவரத்தை முதியவர் ஒருவர் சீரமைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கையில் அரிவாளுடன் நேற்று நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். அந்த வழியாக சென்ற வாகனங்களை அரிவாளை காட்டி சீர் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் முதியவரின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் ஏட்டு பார்த்தசாரதி அங்கு வந்து முதியவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், வேடசந்தூர் அருகே உள்ள அம்மாபட்டிபுதூரை சேர்ந்தவர் என்றும், நுங்கு வியாபாரம் செய்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த அரிவாளை போலீஸ் ஏட்டு பறிமுதல் செய்தார். பின்னர் அவருக்கு சாப்பிட உணவு வாங்கி கொடுத்தும், பஸ் செலவுக்கு பணம் கொடுத்தும் ஏட்டு அனுப்பி வைத்தார்.