கழிவறைக்கு சென்ற முதியவர், முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்


கழிவறைக்கு சென்ற முதியவர், முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்
x

கழிவறைக்கு சென்ற முதியவர், முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்

நாகப்பட்டினம்

நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கழிவறைக்கு சென்ற முதியவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனால் ஆஸ்பத்்திரி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் காமாட்சி காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 74). இவர், நீரிழிவு நோய் காரணமாக கடந்த 20-ந் தேதி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் உள்ள எம்.எஸ்.வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் தர்மலிங்கம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள கழிவறைக்கு சென்றார்.

முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார்

அப்போது அங்கு உள்ள ஒரு கழிவறையின் கதவை திறந்து உள்ளே சென்றபோது முதல் மாடியில் இருந்து தர்மலிங்கம் கீழே விழுந்தார் இதனை பார்த்த உறவினர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தர்மலிங்கத்தை மீட்டனர். அப்போது தர்மலிங்கத்திற்கு முதுகு தண்டுவடத்தில் படுகாயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பா.ஜ.க.வினர் சாலைமறியல்

ஆஸ்பத்திரி நிர்வாக அலட்சியத்தால் தர்மலிங்கம் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி பா.ஜ.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தர்மலிங்கத்தின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 20 பேரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து தர்மலிங்கத்தின் உறவினர்கள் கூறுகையில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் உள்ள எம்.எஸ்.வார்டில் 4 கழிவறைகள் உள்ளன. அதில் முதல் கழிவறை, கழிவு நீர் குழாய் செல்வதற்காக திறந்த வெளியில் விடப்பட்டுள்ளது. இந்த கழிவறை கதவை, பூட்டு போடாமல் வைத்திருந்தனர்.

இதை அறியாத தர்மலிங்கம் கதவை திறந்து உள்ளே சென்றதும், முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கு புறப்படும் நேரத்தில், ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story