பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக தூக்கில் தொங்கினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக தூக்கில் தொங்கினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேலசேவல் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 71). இவர் மனைவியை பிரிந்து தனியாக நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இவரது தேவைகளை மகன் கிங்ஸ்டன் தர்மராஜ் கவனித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிரேம்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை மகன் கிங்ஸ்டன் தர்மராஜ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் வயது முதிர்வால் அவதிப்படுவதாகவும் தன்னை கவனிக்க யாரும் இல்லை. எனவே நான் இருப்பதை விட சாவதே மேல் என பிரேம்குமார் தனது மகனிடம் கூறி அழுதுள்ளார்.
அழுகிய நிலையில் பிணம்
அப்போது அவரை கிங்ஸ்டன் தர்மராஜ் சமாதானம் செய்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து பிரேம்குமார் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை பிரேம்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கபக்கத்தினர் கிங்ஸ்டன் தர்மராஜூக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, சமையல் அறையில் தூக்கில் பிரேம்குமார் அழுகிய நிலையில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிங்ஸ்டன் தர்மராஜ், வடசேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.