கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
சீர்காழியில், கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
சீர்காழி:
சீர்காழியில், கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
தொடர் மழை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.இந்த தொடர்மழையால் அந்த பகுதிகளில் இருந்த கூரை வீட்டின் சுவர்கள் அனைத்தும் நனைந்து ஊறிப்போய் இருந்தது. இந்த நிலையில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
சுவர் இடிந்து விழுந்தது
சீர்காழி திருக்கோலக்கா தெருவை சேர்ந்தவர் ருக்மணி(வயது 80). இவர் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இவரது வீடும் சேதமடைந்து இருந்தது.
நேற்று காலையில் வீட்டில் ருக்மணி தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரது வீட்டின் சுவர் இடிந்து ருக்மணி மீது விழுந்தது.
மூதாட்டி சாவு
இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ருக்மணி பரிதாபமாக இறந்தார். நேற்று காலை ருக்மணியின் மகள் தனது தாயாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வந்தார். கதவை திறந்தபோது உள்ளே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
அதைப்பார்த்து பதறிப்போன ருக்மணியின் மகள் தனது தாயாரை வீட்டில் காணாதது கண்டு தவித்தார். பின்னர் இடிந்து விழுந்து கிடந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பார்த்தபோது தனது தாயார் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
உடல் மீட்பு
அவரது அழுகுரல் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி ருக்மணியின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சீர்காழி போலீசார் அங்கு விரைந்து வந்து ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.