திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் சுவர்கள் அமைக்க வேண்டும்
திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் சுவர்கள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறியதாவது:-
மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தியமான அபாயங்களை குறைக்க அனைத்து திறந்தவெளி கிணறுகளையும் செயமிழந்த ஆழ்துளை கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பது அவசியம்.
இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்தவெளி கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளை தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும்.
மேலும் கைவிடப்பட்ட குவாரி குழிகளில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரி குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும், அபாயகரமான. இடங்களின் அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.