உயிர் பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பொரவாச்சேரியில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிர் பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொரவாச்சேரியில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிர் பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
நாகை அருகே பொரவாச்சேரியில் 2000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலையோரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து பொரவாச்சேரி மெயின் ரோடு, கீழத்தெரு, பெருமாள் வடக்கு தெற்கு தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது.
பொதுமக்கள் அச்சம்
குடிநீர் தொட்டியின் 4 தூண்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது.இதன் அருகே குடியிருப்புகள், ஊராட்சி மன்ற அலுவலகம், ேரஷன் கடை உள்ளதால் இந்த பகுதி எப்போதுமே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
குடிநீர் தொட்டி சாலையின் ஓரத்தில் இருப்பதால், இடிந்துவிழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும். என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கூரை இடிந்து விட்டது
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மகேஷ் கூறுகையில், பொரவாச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆழ்துளை கிணறு மூலம் இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை இந்த குடிநீர்தொட்டி பூர்த்தி செய்து வந்தது. காலப்போக்கில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேற்கூரை இடிந்து தொட்டிக்குள் விழுந்து விட்டது. இதனால் இந்த தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் அசுத்தமாக உள்ளது.
குடிநீரை குடிக்க முடியாது
இந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. இந்த குடிநீர் தொட்டி முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் அசுத்தமாக உள்ளதாக நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. இதனால் குடிநீருக்காக எங்கள் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.