அனந்தம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கழுகுமலை அனந்தம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் ஆதிபராசக்தி அனந்தம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் முன் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 10.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 11 மணியளவில் திருவிழா கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு அரண்மனை பூஜை, இரவு 11 மணிக்கு முழு நேர சிறப்பு பூஜை, 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 4-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. 5-ந் தேதி மாலை 4.30 மணிக்கு அன்னமுத்திரி பூஜை, ஆத்தியப்ப சுவாமி வேட்டையாடுதல் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு ஆத்தியப்ப சுவாமிக்கு படி பூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருமாளிகை ஆதீன குரு திருமால் சுவாமி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் அனந்தகிருஷ்ணன், செல்லச்சாமி, சங்கரேஸ்வரன், திம்மப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.