அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்


அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2022 1:00 AM IST (Updated: 23 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார்.

பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.

இதில் தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அனைத்து தகுதிகளும்...

பேராசிரியர் அன்பழகன் தி.மு.க.விற்காக ஆற்றிய பணிகள் ஏராளம். பேராசிரியர் அன்பழகனுடன் 1962-ம் ஆண்டு முதல் பயணித்த பெருமை எனக்கு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பங்கேற்ற மேடையில் பேசிய அன்பழகன், தலைவராக அனைத்து தகுதிகளும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என்று கூறினார்.

வாரிசு அரசியலை பற்றி இன்றைய தினம் சிலர் பேசுகிறார்கள். அண்ணாவிற்கு பிறகு கலைஞர் இருந்தார். 50 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை வழி நடத்தினார். வயது முதிர்வு காரணமாக அவரால் சில பணிகளை செய்ய இயலாத சூழ்நிலையில் பேராசிரியரால் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக பேராசிரியர் அன்பழகன் அறிவித்தார்.

இன்றைய தினம் கலைஞருக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வழி நடத்துகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இயக்கத்தில் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிலைகளில் இருந்து தலைவராக வந்துள்ளார். தமிழகத்தில் அவர் போகாத இடமே இல்லை.

பா.ஜனதா செய்த சதி

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அவரது துணைவியார் ஜானகி அம்மையார், அவருக்கு பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தனர். அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதல்-அமைச்சர் ஆகலாம்.

சசிகலாவிற்கு பெரும்பான்மை இருந்தும், ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைக்கவில்லை. பா.ஜனதா செய்த சதியால் சசிகலாவால் முதல்-அமைச்சராக முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். தலைவர் கலைஞருக்கு மெரீனாவில் இடம் வழங்க மறுத்த அ.தி.மு.க.விற்கு ஒரு போதும் மக்கள் ஆட்சி பொறுப்பை வழங்கி விட கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கட்சி நிர்வாகிகள்

இதில், சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் டி. செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில மகளிரணி ஆலோசனை குழு உறுப்பினர் காஞ்சனா கமலநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், பாலன், நாகராசன், சித்ரா சந்திரசேகர், கோதண்டன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story