அன்புஜோதி ஆசிரம வழக்கு:கைதான மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது போன்ற அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.
இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, மரியா ஜூபின், பிஜூமோன், சதீஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் மீண்டும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆசிரம மேலாளர் பிஜூமோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாட்கள் அதாவது அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.