பாலியல் கொடுமை நடந்த அன்புஜோதி ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து மதமாற்றம்
பாலியல் கொடுமை நடந்த அன்புஜோதி ஆசிரமத்தில் 2 அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விழுப்புரம்,
பாலியல் கொடுமை நடந்த அன்புஜோதி ஆசிரமத்தில் 2 அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு போதை மருந்து கொடுத்து மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
அன்புஜோதி ஆசிரமம்
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர். இங்கிருந்த 15 பேர் மாயமாகி உள்ளனர். இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் இருந்த 140 பேர் மீட்கப்பட்டு பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 அறைகளுக்கு சீல்
இந்த நிலையில் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையிலான குழுவினர் கலெக்டர் பழனி முன்னிலையில் நேற்று அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்புஜோதி ஆசிரமத்தில் மதமாற்றம் செய்ய பயன்படுத்திய டார்க் ரூம் என்று சொல்லக்கூடிய அறையையும், ஆவணங்கள் வைப்பதற்கு பயன்படுத்திய அறையையும் பூட்டி சீல் வைத்துள்ளோம்.
35 ஆயிரம் போதை மருந்துகள்
அன்புஜோதி ஆசிரமத்தில் 35 ஆயிரம் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதை மருந்துகள் எங்கிருந்து வந்தது?, யார் மூலமாக எந்த எந்த ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மருந்துகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன், 15 நாட்களுக்குள் அறிக்கை மூலம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.
ஆதாரம் சிக்கியுள்ளது
மேலும் ஆசிரமத்தில் இரவு நேரங்களில் மதமாற்றம் செய்யும் வேலை நடந்துள்ளது. இதற்கான ஆதாரம் எங்களிடம் சிக்கியுள்ளது. ஒரு சிறாரின் வாக்குமூலத்தில் 3 பேரை மதமாற்றம் செய்திருப்பது உறுதியாகி உள்ளது. 60 பேர் தங்க வைக்க வேண்டிய அறையில் 140 பேரை அடைத்து வைத்துள்ளனர். சில பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இங்கு விசாரணை நடத்தப்பட்ட அறிக்கையை ஆணையத்திடம் சமர்பிப்போம். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆசிரம விவகாரம் குறித்து தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.