'அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா அமைதியடைய உதவுங்கள்: ‘அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ள அச்சிறுமி, 'என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இதுதான். தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் விருப்பமும் மதுவிலக்குதான். அதை நிறைவேற்ற உதவும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள். மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள். விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா அமைதியடைய உதவுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.