குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை: கட்டுமர மீனவர்களின் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்


குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை: கட்டுமர மீனவர்களின் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் தொடங்கியது. அதே சமயத்தில் கட்டுமர மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். அவர்களின் வலையில் நெத்திலி மீன்கள் சிக்கின.

கன்னியாகுமரி

குளச்சல்,

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் தொடங்கியது. அதே சமயத்தில் கட்டுமர மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். அவர்களின் வலையில் நெத்திலி மீன்கள் சிக்கின.

மீன்பிடி தடைக்காலம்

ஆழ்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவங்களாக உள்ளது.

குமரி கிழக்கு கடற்கரை பகுதிகளாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் முதல் திருவள்ளூர் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கிராமங்களில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்கடலில் தங்குவதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மீன் பதப்படுத்த ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

பராமரிப்பு பணி

இந்த ஆண்டு குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அதன்படி நேற்று அதிகாலை முதல் விசைப்படகுகள் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது.

இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வள்ளங்கள் சென்றன

மீன்பிடி தடைகாலத்தில் கட்டுமரங்கள், வள்ளங்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வர். விசைப்படகு கடலுக்கு செல்லாததால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

கட்டுமரங்கள், வள்ளங்கள் மீனவர்கள் வழக்கம்போல் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்று விட்டு காலையில் கரைக்கு திருப்பினர். அவற்றில் ஏராளமான நெத்திலி மீன்கள், விள மீன்கள் கிடைத்தன. அவை ஏலக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.


Next Story