நெத்திலி மீன் சீசன் தொடங்கியது
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியது. போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குளச்சல்,
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியது. போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மீன்பிடி துறைமுகம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி இருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். கட்டுமரங்கள், வள்ளங்கள் கரையில் இருந்து சிறிது தூரம் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். இவை காலையில் மீன்பிடிக்க சென்று விட்டு மதியத்திற்குள் கரை திரும்பி விடும்.
இந்தநிலையில் குளச்சல் கடல் பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் காற்று காரணமாக நேற்று முன்தினம் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை.
நெத்திலி மீன்கள்
இந்தநிலையில் குளச்சல் பகுதியில் தற்ேபாது நெத்திலி மீன் சீசன் தொடங்கியது. நேற்று மீன்பிடிக்க சென்ற கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றை கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.600 முதல் ரூ.800 வரை விலை போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ெநத்திலி மீன்கள் குட்டை ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை விலை போனது குறிப்பிடத்தக்கது.
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியும் போதிய விலை கிடைக்காததால் கட்டுமர மீனவர்கள் கவலை அடைந்தனர்.