மேலூர் அருகே பழமையான குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மேலூர் அருகே பழமையான குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலூர்
மேலூர் அருகே பழமையான குகைகள், ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஓவியங்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் புலி மலை உள்ளது. இந்த மலையில் உள்ள வரலாற்று குறியீடுகளை ஜனநாயக வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த பாண்டியராஜ் கருப்பன், வரலாற்று ஆர்வலர்கள் அறிவு செல்வம், மணிகண்டன், கோவில் கட்டிடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த மலை பாறைகளில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என 100-க்கும் மேற்பட்ட சிவப்பு நிற ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை கற்காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே மதுரையில் 6 இடங்களில் சிவப்பு நிறங்களில் கண்டறியப்பட்ட ஓவியங்கள் வகைகளை சேர்ந்தது என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஓவியத்தில் தனித்தனியாக நிற்கும் மனிதனும், அம்மனிதனின் கால் அருகே விலங்கும் காட்டப்பட்டுள்ளது. வட்டம், நட்சத்திரம், கட்டம் கட்டமாக கொண்ட சதுர வடிவம் என பலவகையான குறியீடுகளும் காணப்படுகின்றன.
ஆய்வு
இவை கோட்டூருவமாகவும், செஞ்சாந்து உருவமாகவும் மிகவும் உயரமான உருவம் கொண்ட மனிதன் உருவங்களுமாக உள்ளது. 10 நபர்கள் தங்கும் அளவிற்கான அளவு கொண்டதாக இக்குகை காணப்படுகிறது. சொரசொரப்பான செங்குத்து மலையாக இருப்பதால் பாதுகாப்பான முன்னேற்பாடுடன் சென்று ஆய்வு செய்து வந்தோம். தமிழகத்தை பொறுத்தவரை சிவப்பு பாறை ஓவியங்கள் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என அனுமானமாக கருதப்படும் நிலையில் இப்பாறை ஓவியத்தின் சரியான காலத்தை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதற்காக தொல்லியல் துறையுடன் இணைந்தோ அல்லது இப்புலிப்பட்டி ஊரை சேர்ந்த ஜனநாயக வாழ்வுரிமை சங்கத்துடனோ இணைந்து, பாறை ஓவியங்களின் காலத்தை கணிக்க உதவும் கார்பன் 14, தெர்மோ லூமினசன்ஸ், ஆப்டிகலி ஸ்டிமுலேட்டடு லூமினசன்ஸ் அல்லது யுரேனியம் தோரியம் வகை ஆய்வினை செய்ய முடிவு செய்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.