ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலத்தை சேர்ந்த விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலத்தை சேர்ந்த விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மிளகனூரில் வரசித்தி விநாயகர் கோவிலில் ஒரு பழமையான சிலை இருப்பதாக அவ்வூரை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த விநாயகர் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:- இந்த சிலை இரண்டரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
நேர்த்தியான சிற்பம்
இந்தசிலை நான்கு கரங்களுடனும், அதில் வலது பின் கரத்தில் மழுவும், இடது பின் கரத்தில் பாசம் என்ற ஆயுதமும் உள்ளது. பாசம் என்கிற ஆயுதம் விநாயகரின் தாய் பார்வதி தேவியின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை தன் மகன் விநாயகருக்கு தந்தருளியதாக ஐதீகம். வலது முன் கரத்தில் அபய முத்திரையுடனும், இடது முன்கரத்தில் மோதகத்தை பிடித்த படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
தலையில் கிரீடம் தரித்தும் அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வயிற்று பகுதி வரை நீண்ட துதிக்கையும், இரண்டு தந்தங்களுடனும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
சிவன் கோவில்
மேலும் நான்கு கரங்களிலும் ஆபரண அணிகலன்கள் அணிந்தபடியும், இரண்டு கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடியும் அமர்ந்த கோலத்தில் முற்கால பாண்டியருக்கே உரித்தான கைவண்ணத்தில் இந்த சிலை சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை பார்க்கும் போது மிளகனூரில் முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும். கால ஓட்டத்தில் கோவில் அழிந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.