பழமையான சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும்
மன்னார்குடி அருகே, நூற்றாண்டுகளுக்கும் மேலான பழமையான சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே, நூற்றாண்டுகளுக்கும் மேலான பழமையான சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சுமைதாங்கி கல்
மன்னார்குடி கீழப்பாலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலையில் வலது பக்கமாக நம் மூதாதையர்கள் பயன்படுத்திய சுமைதாங்கி கல் கம்பீரமாக நிற்கிறது. தற்போது போல் வாகனங்கள் இல்லாத முன்னொரு காலத்தில் தங்கள் வாங்கும் பொருட்களை மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை தலைசுமையாக தலையில் வைத்து சுமந்து நீண்ட தூரம் பயணம் செய்து விற்பனை செய்யவும் மற்றும் வாங்கி வரவும் செய்தனர். இதுபோல் தலை சுமையாக சுமந்து நீண்டதூரம் பயணத்தின்போது சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுவார்கள். பின்னர் சுமையை தூக்கிவிட ஆட்கள் இல்லாமல் சுமையை தூக்குபவர்களின் பயணம் தடைபடும். இதனால் தங்கள் சுமையை எளிதாக தலையில் வைத்துக்கொள்ள ஏதுவாக இந்த சுமைதாங்கி கற்களை நம் முன்னோர்கள் சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே அமைத்திருக்கிறார்கள்.
எஞ்சி நிற்கும்...
சுமார் 5 அடி உயரத்தில் இந்த சுமைதாங்கி கற்கள் இருப்பதால் தலையில் சுமையை சுமந்து வருபவர்கள் அந்த சுமையை அந்த கற்களின் மேல் இறக்கி வைத்து இளைப்பாறி விட்டு, மீண்டும் தாமாகவே அந்த சுமையை எளிதாக தலையில் வைத்து எடுத்து சென்றனர். தற்போது பல சுமைதாங்கி கற்கள் அழிந்துவிட்ட நிலையில் எஞ்சி நிற்கும் ஒரு சில கற்கள் சாலை ஓரங்களில் நிற்பதை காண முடிகிறது. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் உதவும் மனப்பான்மையையும் தற்போதைய தலைமுறையினர் உணரும் வகையில் அரசும், நெடுஞ்சாலைத்துறையும் தொன்மையான சுமைதாங்கி கற்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து மன்னார்குடி நகர சபை துணைத்தலைவர் கைலாசம் கூறுகையில், நம்முடைய முன்னோர்களின் கடின உழைப்பும் அவர்களுடைய வாழ்க்கை முறையும், பிறருக்கு உதவும் உயர்ந்த நோக்கத்தையும் தற்போதைய இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வருங்கால சந்ததிகளுக்கு நினைவூட்டும் வகையில் இதுபோன்ற சுமைதாங்கி கற்களை கணக்கெடுத்து, அதனை பாதுகாக்க வேண்டும். மேலும் அதன் அருகில் சுமைதாங்கி கல் குறித்து சிறு குறிப்பு அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.