மேலும் ஒரு பெண்ணின் உடல் மீட்பு


மேலும் ஒரு பெண்ணின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

மசினகுடி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

திடீர் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஓடும் கெதறல்லா ஆற்றின் கரையோரத்தில் கோவில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர், பேரகட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றனர். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றுகொண்டு இருந்தது. இந்தநிலையில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், பாலத்தின் வழியே மீண்டும் ஆற்றின் மறு கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். மழை காரணமாக ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஜக்கலோரையை சேர்ந்த உறவினர்களான சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பெண்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

3 பெண்கள் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள், மசினகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மீட்பு பணிகள் நடந்தது. அப்போது 3 கிலோ மீட்டர் தொலைவில் புதரில் சிக்கி இருந்த சரோஜா, வாசுகி, விமலா ஆகியோரின் உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டது. சுசீலாவின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், சுசீலாவின் கதி என்ன என்று தெரியவில்லை.

உடல் மீட்பு

இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக சுசீலாவின் உடலை தேடும் பணி அதிகாலையில் தொடங்கியது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 75 பேர் ஈடுபட்டனர். மதியம் 2 மணியளவில் சுசீலாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. சம்பவம் நடந்த தரைப்பாலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், புதரில் உடல் சிக்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவிலுக்கு சென்று திரும்பிய போது, 4 பெண் பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story