மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் 28 படுக்கைகளை கொண்ட 4 தனி வார்டுகள் அமைப்பு
கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி 28 படுக்கைகள் கொண்ட 4 தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்
கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளை சுற்றி கிடக்கும் டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இந்த கொசுப்புழுக்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து டெங்கு கொசுக்கள் கடித்து காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் ஒருவருக்கு பாதிப்பு
இதற்கிடையில் குறிஞ்சிப்பாடி தைக்காகுப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அவருக்கு நேற்று டெங்கு காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
4 தனி வார்டுகள் அமைப்பு
இது பற்றி கடலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தலா 10 படுக்கைகள் கொண்ட ஆண்கள், பெண்கள் தனி வார்டு, தலா 4 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் வார்டு, கர்ப்பிணி தாய்மார்கள் என மொத்தம் 28 படுக்கைகள் கொண்ட 4 தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகவே பொதுமக்கள் தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசுப்புழுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.