பெண் டாக்டர், பயணியிடம் செல்போன், லேப்டாப் திருடிய ஆந்திர வாலிபர் கைது


பெண் டாக்டர், பயணியிடம் செல்போன், லேப்டாப் திருடிய ஆந்திர வாலிபர் கைது
x

ஓடும் ரெயிலில் பெண்டாக்டர் மற்றும் பயணியிடம் செல்போன், லேப்டாப் திருடிய ஆந்திராவை சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

செல்போன்கள், லேப்டாப் திருட்டு

சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 14-ந் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி மற்றும் கோட்டையம் பகுதியை சேர்ந்த சசிதரன் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் உறங்கும் நேரத்தில் கைப்பை, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ஏ.டி.எம் கார்டு, பணம் ஆகியவை திருட்டு போயுள்ளது. அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு பகல் 2.45 மணிக்கு வந்தது.

செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தி மற்றும் சசிதரன் ஆகியோர் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப் பதிவு செய்தார். மேலும் நேற்று போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் சோதனை செய்த போது பயணிகள் தங்கும் அறையில் சந்தேகத்தின் பேரில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

பட்டதாரி வாலிபர் கைது

விசாரணையில் அவர் சித்தூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்றும் எம்.பி.ஏ., பட்டதாரி எனவும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பிரீத்தி மற்றும் சசிதரன் ஆகியோரிடம் இருந்து ரூ.39 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ஹரிஷ் பாபுவை கைது செய்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், லேப்டாப் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story