ரத்த சோகை கண்டறியும் முகாம்
ரத்த சோகை கண்டறியும் முகாம்
வளரும் இளம் பருவத்தினரிடையே ரத்தசோகை நோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மத்திய அரசின் அனீமியா முக்பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே ரத்த சோகை கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் பள்ளி செல்லாத 10 வயது முதல் 19 வயதுள்ளவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தின் அருகில் உள்ள ஊட்டசத்து மையங்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அனீமியா முக்பாரத் திட்டத்தின் கீழ் ரத்த சோகை கண்டறியும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. திருவாரூர் தாலுகாவில் திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவாரூரை அடுத்த புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ரத்த சோகை கண்டறியும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பள்ளி மாணவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்களில் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.